சென்னை: உடல்நலக்குறைவால் உயிரிழந்த நடிகர் சரத்பாபுவின் உடலுக்கு, நடிகர்கள் ரஜினிகாந்த், சூர்யா உள்ளிட்ட திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அவரது உடல் சென்னையில் தகனம் செய்யப்பட்டது.
தெலுங்கு திரையுலகில் 1973-ம் ஆண்டு ‘ராம ராஜ்ஜியம்’ என்ற படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் சரத்பாபு (71). தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் பல தரப்பட்ட குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானார். தமிழில் இயக்குநர் மகேந்திரன் இயக்கத்தில் நடித்த ‘உதிரிபூக்கள்’ அவருக்கென தனி அடையாளத்தை கொடுத்தது. தொடர்ந்து அவரது இயக்கத்தில் ரஜினிகாந்துடன் நடித்த ‘முள்ளும் மலரும்’, இயக்குநர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் நடித்த ‘நிழல் நிஜமாகிறது’ போன்ற படங்கள் இவரது நடிப்பை இன்றுவரை பறை சாற்றுகின்றன. அதேபோல் இவர் நடிகர் ரஜினிகாந்துடன் நடித்த வேலைக்காரன், அண்ணா மலை, முத்து போன்ற வணிக ரீதியான (கமர்ஷியல்) படங்களும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்