இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் 5வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய முதல் 7 போட்டிகளில் 5 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து வெற்றி நடை போட்டு வருகிறது. முன்னதாக இந்தியாவுக்காக 3 விதமான உலகக் கோப்பைகளை வென்றதைப் போலவே ஐபிஎல் தொடரிலும் 4 கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன் எம்எஸ் தோனி சென்னை 2வது வெற்றிகரமான அணியாக ஜொலிப்பதில் முக்கிய காரணமாக செயல்பட்டு வருகிறார்.
குறிப்பாக கடந்த 15 வருடங்களில் பல்வேறு வீரர்கள் சிறப்பாக வழி நடத்தி மின்னல் வேகத்தில் விக்கெட் கீப்பிங் செய்து அபாரமான ஃபினிஷிங் கொடுத்து நிறைய போட்டிகளில் வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ள அவர் சென்னையில் ரத்தமும் சதையும் கலந்த இதயமாக பார்க்கப்படுகிறார். அதனால் தன்னை தல என்று தலையில் வைத்து கொண்டாடும் தமிழக ரசிகர்களின் மீதிருக்கும் பாசத்தால் தன்னுடைய கேரியரின் கடைசி போட்டி சென்னையில் நடைபெறும் என்று தோனி ஏற்கனவே அறிவித்துள்ளார். அதற்கேற்றார் போல் 2019க்குப்பின் 4 வருடங்கள் கழித்து சென்னை சேப்பாக்கத்தில் தற்போது ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
கஷ்டப்பட போறாங்க:
இருப்பினும் கடந்த சில வருடங்களாக அதிரடியாக விளையாட தடுமாறிய தோனி இந்த வருடம் கடைசி நேரத்தில் ஓரிரு ஓவர்களில் களமிறங்கி சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். ஆனாலும் கூட முழங்கால் வலியால் அவதிப்பட்டு வரும் அவர் வேகமாக ஓடி டபுள் ரன்கள் எடுப்பதற்கு தடுமாறுகிறார். அதனால் என்னதான் ஃபிட்டாக இருந்தாலும் விரைவில் 42 வயதை தொடும் தோனி இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சொல்லப்போனால் ஹைதராபாத்துக்கு எதிரான கடைசி போட்டியில் வென்ற பின் தம்முடைய கேரியரின் கடைசி பகுதியில் இருப்பதால் மகிழ்ச்சியுடன் விளையாடுவதாக தோனியும் அதை மறைமுகமாக தெரிவித்தார். முன்னாதாக கடந்த 15 வருடங்களில் எத்தனை அணிகளில் நிலையான கேப்டன்கள் இல்லாமல் இதர அணிகள் தடுமாறிய நிலையில் சென்னை மட்டும் தோனியின் தலைமையில் 13 சீசனில் 11 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று தொடர்ந்து வெற்றிகரமான அணியாக செயல்பட்டு வருகிறது.
மேலும் தோனி களத்தில் இருக்கும் வரை நிச்சயம் ஏதாவது மேஜிக் செய்து வெற்றி பெற வைப்பார் என்ற எண்ணமும் அந்த அணி ரசிகர்களிடம் உறுதியாக உள்ளது. சொல்லப்போனால் இந்த சீசனில் கூட சில போட்டிகளில் முதன்மை வீரர்கள் திண்டாடும் போது தோனி தனி ஒருவனாக கடைசி ஓவரில் போராடுவதை பார்க்க முடிந்தது. அப்படி மாற்று வீரர் இல்லாத ஒருவராக பார்க்கப்படும் தோனி ஓய்வு பெற்றதும் இதே போல வெற்றி நடை போடுவதற்கு சென்னை மிகவும் கஷ்டப்படும் என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் வெளிப்படையாக பேசியுள்ளார்.
குறிப்பாக ஓய்வு பெற்ற பின்பு தான் அவரை எந்தளவுக்கு மிஸ் செய்வோம் என்ற மதிப்பை அனைவரும் உணர்வார்கள் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஜியோ சினிமா சேனலில் பேசியது பின்வருமாறு. “கடந்த போட்டியில் அவர் எந்தளவுக்கு இருந்தார் என்பதை நீங்கள் பார்த்தீர்கள். இத்தனை வருடங்கள் விளையாடி எடுத்துக்கொண்ட அனுபவத்தை இதர வீரர்களிடம் அவர் முன்வைப்பதை பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. அதே போல அவரது தலைமையில் விளையாடுவதற்கு சென்னை வீரர்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர் விடைபெறும் போது தான் எந்தளவுக்கு மிஸ் செய்யப் போகிறோம் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்”
“அவர் விடை பெறுவது நிச்சயம் சென்னை அணியில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில் அவர் தன்னுடைய அணியில் விளையாடும் வீரர்களை துருப்புச் சீட்டாக மாற்றி விளையாட வைக்கிறார். எனவே ஓய்வு பெற்ற பின் சிஎஸ்கே அவரை மிகவும் மிஸ் செய்யும். அத்துடன் சொந்த ஊரில் வெற்றி பெறுவது சென்னை அணியின் வெற்றியில் முக்கிய ரகசியமாக இருக்கிறது. ஸ்பின்னர்கள், ஆல் ரவுண்டர்கள் என அனைவரையும் எம்எஸ் தோனி மற்றும் ஸ்டீபன் பிளமிங் ஆகியோர் மிகச் சிறப்பாக வழி நடத்துகிறார்கள்” என்று கூறினார்.